அட்சய திருதியை நன்னாள் ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருள்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை தரும் என்பது நம்பிக்கை. தங்கம் விற்கும் விலைக்கு எல்லோராலும் வாங்க முடியுமா என்றால் கேள்விக்குறிதான். அப்படி என்றால் அட்சய திருதியை நாளில் என்ன செய்தால் நன்மை பயக்கும், செல்வ வளம் பெருகும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஏப்ரல் 30 ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. திருதி என்பது மூன்றாவது திதி. திருதியை என்பது வளர்வது, பிறை என்று அர்த்தம். வளர்பிறையில் வரக்கூடியது திருதியை. சந்திரனும், சூரியனும் உச்சமாக இருப்பதே அட்சய திருதியை என்று கூறப்படுகிறது. அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சய திருதியை ஆகும். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள் ஆகும். அட்சய திருதியை தினத்தன்று சனி, ராகு, சுக்கிரன் 12 ஆம் வீட்டிலும், சூரியன், சந்திரன் உச்சமாகவும், செவ்வாய் நீச்சமாகவும் இருக்கும்.
அட்சய திருதியை நாளில் எந்தவொரு பொருள்களை வாங்கினாலும் அல்லது முதலீடு செய்தாலும் அது செழித்து வளரும் என்பது நம்பிக்கை. பொதுவாக அட்சய திருதியை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது தங்கம், வெள்ளி தான். தற்போது விற்கும் விலைக்கு எல்லோராலும் தங்கம், வெள்ளி வாங்குவது என்பது இயலாத காரியம். அந்த வகையில், இந்த நன்னாளில் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசியினர் செய்ய எந்தப் பொருள்களை வாங்கினால் நற்பலன்களைப் பெறலாம், எந்தப் பொருள்களை தானமாக கொடுக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கோதுமையில், அரிசியில் செய்த உணவை தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும். தானியமாகவும் தானம் கொடுக்கலாம். தங்கம், வெள்ளி வாங்கக்கூடிய வசதியுள்ளவர்கள் வாங்கலாம். இல்லையெனில், ஏதாவதொரு பொருள் சேர்க்கை தொடர்பான பாசிட்டிவான விஷயங்களை வாங்கலாம். ஆடை, பர்ஸ் போன்றவற்றை வாங்கலாம். அடர் நிறங்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கருப்பு, கருநீலத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. சனி 12 ஆம் வீட்டில் இருப்பதால் பழைய பொருட்களை, பயன்படுத்தாத பொருட்களை தூக்கி வீசுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் வெள்ளியிலான பொருள்களை 1 கிராமாவது வாங்கி வைத்துக் கொள்வது நன்மை பயக்கும். வீடு, வாகனம் வாங்குவது போன்றவற்றுக்கு உகந்த காலமாக இருக்கும். புரதச் சத்து நிறைந்த இனிப்பு பொருள்களை தானமாகக் கொடுப்பது நல்லது. உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுக்கு பரிசு கொடுக்கலாம்.
மிதுனம்
மிதுனத்தின் வீடு தகவல் தொடர்பில் வலிமையாக இருக்கக்கூடிய வீடு. அட்சய திருதியை நாளில் சொடி, கொடிகளை தானமாக கொடுக்கலாம். பூ, பழம் வரும் செடிகளை தானமாக அளிப்பது நன்மை பயக்கும். புத்தகம், பேனா, நோட்டுகள் போன்றவற்றை ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பது அமோகமான நற்பலன்களைத் தரும். உங்களுக்கு நீங்களே ஒரு புத்தகத்தை வாங்கிக் கொள்வது நல்லது.
கடகம்
கடகத்தைப் பொருத்தவரை அட்சய திருதியை நாளில் சந்திரன் உச்சமாக இருக்கிறார். சூரியன் உங்களுக்கு உதவி செய்யும் கிரகமாக உள்ளார். அஷ்டம சனி முடிந்து அருமையான காலகட்டமாக இருக்கிறது. உங்களுக்கு ஜாக்பாட் நேரமாக இருக்கும். அட்சய திருதியை நன்னாளில் பழச்சாறு, பால் பாயாசம், நீர் மோர் போன்ற நீராகரங்கள், தயிர், பாலால் செய்யப்பட்ட உணவுகளை தானமாக கொடுப்பது அற்புத பலன்களைத் தரும். உங்களுக்கென்று முத்துக்களினால் ஆன மாலைகள், கம்மல் என ஏதாவதொரு அணிகலன்களை வாங்கிக் கொள்ளலாம். வாய்ப்பிருந்தால் வெள்ளியிலான பொருள்களை வாங்குவது நன்மையைத் தரும்.
சிம்மம்
அஷ்டம சனி கடினமான காலம் என்று கூறினாலும், அட்சய திருதியை நாளில் சூரியன், சந்திரன் உச்சமாக இருப்பதால் இந்த நன்னாளில் வெல்லம் போட்ட ஏதாவதொரு இனிப்பு பொருள்களைச் செய்து ஏழை எளியோருக்கு தானமாக கொடுப்பது அருமையான பலன்களை அள்ளித் தரும். இந்த தானம் தடைகளை நிவர்த்தி செய்து, மன நிம்மதியைத் தரும். ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். உங்களுக்கென்று என்ன செய்து கொள்ளலாம் என்றால் இன்று வீட்டை தூய்மையாக வைத்து, பழைய பொருட்களை அகற்றுவது நன்மையைத் தரும். ஒளி தரக்கூடிய விளக்கு, பல்ப் போன்றவற்றை வாங்குவது நல்ல பலன்களைத் தரும். வாங்கும் பொருள்களை அடர் நிறத்தில் வாங்காமல் இருப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களைப் பொருத்தவரை சூரியன், சந்திரன் உச்சமாக இருக்கிறது. மற்ற கிரகங்களும் நல்ல நிலையில் இருக்கின்றன. அருமையான காலகட்டமாக இருக்கிறது. சுக்கிரன் உச்சமாக இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. தானியங்களை தானமாகக் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும்.
துலாம்
துலாம் ராசிக்கு 7, 8 இல் சூரியன், சந்திரன் உச்சமாக உள்ளனர். சுக்கிரனும் வலிமையான இடத்தில் இருக்கிறார். எடைக்கு எடை இனிப்புகளை தானமாக கொடுப்பது நல்லது. உங்களுக்குத் தேவையான வாங்கிக் கொள்வது அருமையான பலன்களைத் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த அட்சய திருதியை நாளில் சூரியனும், சந்திரனும் யோக கிரகங்களாக வருகின்றன. இந்த நேரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளை எடுக்க சிறப்பான நாளாக இருக்கும். சிறிய விஷயங்களைச் செய்வது கூட உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். ஏழை எளியவர்களுக்கு பல நாட்களுக்குப் பயன்படுத்தக் கூடிய வகையில் பொருள்களைத் தரலாம். உதாரணம் மளிகைப் பொருள்கள். குருவின் பார்வையில் விருச்சிக ராசிக்காரர்கள் இருப்பதால், உங்களுக்கென்று எதாவது சுபமான, மங்களமான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.
தனுசு
காலச் சக்கரத்திற்கு 9 வது ராசி. பக்தி, ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் எளிமையாக இணையும் ராசியினர். தனுசு ராசிக்காரர்கள் எந்தவொரு காரியத்தை எடுத்தாலும் அதை இறை வழிபாட்டோடு செய்தால் அதில் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். அதனால், அட்சய திருதியை நாளில் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது. சுவாமி படங்கள், பூஜையறையில் வைக்கும் பொருள்களை தானமாக கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். தங்கம், வெள்ளி வாங்குவது நல்லது. இல்லையெனில், புத்தகம் வாங்குவது, புத்தகம் வைப்பதற்கான பொருள்களை வாங்குவது, குருவிடம் ஆசி வாங்குவது நன்மையைத் தரும்.
மகரம்
மகர ராசி சனியினுடைய ராசி. புதிய காரியங்களைத் தொடங்காமல் இருப்பது நல்லது. அட்சய திருதியை நாளில் உடலை வருத்தி வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். முட்டி போட்டு சுவாமியை வழிபடுவது நல்லது. தனக்குப் பயன்படாத பொருள்களை, பிறருக்குப் பயன்படுத்தும் பொருள்களை பரிசாக கொடுப்பது நல்ல பலன்களைத் தரும்.
கும்பம்
12 ராசிகளில் வலிமை மிக்க ராசி கும்பம். கும்ப ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாளில் ஜென்ம சனி விலகியுள்ளது. 6 க்குரிய சந்திரன், 7க்குரிய சூரியன் உச்சத்தில் உள்ளனர். சுக்கிரனும் நேர்மறையான இடத்தில் இருக்கிறார். மற்றவர்கள் முன்னேறும் வகையில் ஏதாவதொரு பொருள்களை வாங்கிக் கொடுப்பது நல்லது. கணக்கு பார்க்காமல் முழு மனதோடு துணி, உணவு என எந்தப் பொருள்களை நீங்கள் தானமாக அளித்தாலும் நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பல்வேறு பாதிப்புகளை கொடுத்து வருகிறார். அட்சய திருதியை நாளில் இறை வழிபாடு செய்வது, குருவின் ஆசியைப் பெறுவது நல்லது. இந்த நன்னாளில் உங்கள் தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்தால் சனியின் தாக்கம் குறையும். அதனால், ஆசி வாங்குவது உங்களுக்கு நன்மையைத் தரும். உங்களை விட வயதில், ஆற்றலில், திறமையில் பெரியவர்களாக இருப்பவர்களிடம் அன்பளிப்பு கொடுத்து ஆசி வாங்கிக் கொள்வது நல்லது. இந்த நன்னாளில் உங்களுக்கென்று எந்தவொரு பொருள்களையும் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.