கிரியுல்ல – கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டிற்குள் ஒருவர் காயமடைந்து இருப்பதாக கிரியுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் அவரை மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கொடவத்தை, மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரான பிக்கு உயிரிழந்தவரின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் விகாரை ஒன்றில் வசிக்காமல் மாரவில பிரதேசத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது குறித்த பிக்கு அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன் கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.