முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை தெற்கு பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீடே தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.
23.07.24 அதிகாலை 12.00 மணியளவில் இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது. ஓட்டு வீடாக காணப்படும் குறித்த வீட்டின் கூரைப்பகுதியில் தீ பற்றி பரந்து எரியத்தொடங்கியுள்ளது இதனால் வீட்டின் கூரைப்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
சம்பவத்தினை அறிந்த கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தீயினை கட்டிற்குள் கொண்டுவந்துள்ளதுடன் மின்சார சபையினருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்த மின்சார சபை ஊழியர்கள் வீட்டிற்கான மின் இணைப்பினையும் துண்டித்துள்ளார்கள்.
இந்த தீ பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த வீட்டு உரிமையாளர்களின் உறவினர் முறையான இளைஞன் ஒருவர் வீட்டின் கூரை ஒடு விழுந்து காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறித்த வீட்டில் கடந்த 07.01.2024 அன்று இரவு வீட்டு பெண்ணான (போரில் கால் ஒன்றினை இழந்த அங்கவீனமான குடும்ப பெண்) வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் குறித்த வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாதவர்கள் பெண்ணின் மீது கடுமையாக இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்கள் கொலைசெய்யும் முயற்சியில் இந்த தாக்குதல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.