நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புத்தளம் – திருகோணமலை வீதியின் 17 ஆம் சந்திக்கு அருகில் அனுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வீதியோரத்தில் இருந்த பெண் ஒருவர் படுகாயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அளுத்கம பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை தன்னேகும்புர – ராகல வீதியின் மைலபிட்டிய பிரதேசத்தில் வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரவக பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய நபரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
இதேவேளை, கொழும்பு – வெல்லவாய பிரதான வீதியின் தங்காலை வைத்தியசாலைக்கு செல்லும் சந்தியில், மாத்தறையில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பஸ் ஒன்று பயணிகளை இறக்கி விட்டு, முன்னோக்கி செல்லும் போது, பஸ்ஸுக்கு முன்னால் வீதியைக் கடந்த பெண் ஒருவர் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த 41 வயதான பெலியத்தை சேர்ந்த பெண் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மீரா மகளிர் கல்லூரிக்கு அருகில் மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பக்கவாட்டு வீதியில் திரும்ப முற்பட்ட போது மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மற்றும் மேலும் ஒருவரும் காயமடைந்துள்ளதுடன், சிகிச்சை பெற்று வந்த 20 வயதுடைய சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் அரலகங்வில மனம்பிட்டிய, மெதகம பகுதியில், மனம்பிட்டியவில் இருந்து அரலகங்வில நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளது. இவ்விபத்தில் 49 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.