தம்புள்ளை தம்புர பகுதியில் காட்டு யானையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகமூன பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் மூன்று அதிகாரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (15) இரவு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காட்டு யானை ஒன்று உயிரிழந்தது.
உயிரிழந்தது 35 வயதான ‘ராஜா’ என அழைக்கப்படும் காட்டு யானையாகும். குறித்த யானைக்கு ஒரு கண் பார்வை தெரியாது எனவும் கூறப்படுகிறது.
இந்த காட்டு யானையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் முச்சக்கரவண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பொலிஸ் உத்தியோகத்தர்களை காட்டு யானையை தாக்க முற்பட்டதாகவும், இதனால் ரி56 ரக துப்பாக்கியால் காட்டு யானையை சுட்டுக்கொன்றதாகவும் பகமூன பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் காரணமாக நேற்று இரவு அப்பகுதி மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.