2024 ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 25 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 1,818 வீதி விபத்துகளில் 1,898 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 676 பேர் பாதசாரிகள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இவ்வருடம் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“பதுளை மற்றும் ரதெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் மாத்திரம் 62 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தில் ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 25 வரை 1,818 வீதி விபத்துகள் நிகழ்ந்துள்ளன. பலத்த காயங்களுடன் பதிவாகியுள்ள விபத்துக்களின் எண்ணிக்கை 4,133 ஆகும். மேலும் சிறு காயங்கள் ஏற்பட்ட விபத்து சம்பங்களின் எண்ணிக்கை 7,146 ஆகும்.”
“அத்தோடு 1,818 வீதி விபத்துகளில் 1,898 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 676 பேர் பாதசாரிகள். 583 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாவர். வாகன சாரதிகள் 135 பேர். வாகன பயணிகள் 249 பேர் மற்றும் 123 சைக்கிள் ஓட்டுநர்கள்.”
“மேற்படி 1,818 வாகன விபத்துக்களில் 730 மோட்டார் சைக்கிள்கள், 258 லொறிகள், 209 முச்சக்கர வண்டிகள், 146 தனியார் பஸ்கள், 135 கார்கள், 118 வேன்கள், 55 கெப் வாகனங்கள், 21 ஜீப்கள், 12 சைக்கிள்கள், 9 கொள்கலன் லொறிகள், 6 கன்டெய்னர் மற்றும் அட்டெக்டர் 5 ஆகும்”
“விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனங்களின் எண்ணிக்கை 42 ஆகும்” “மக்கள் வீதிகளில் பயணிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.