இந்தியா – தேனி அருகே நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது மது போதையில் ஜாலியாக பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட ஒரே தெருவைச் சேர்ந்த 5 நண்பர்களில், இவர்களது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கூடலூரில், ஒரே தெருவைச் சேர்ந்த 5 இளைஞர்கள் வெவ்வேறு ஊர்களில் பணிபுரிந்து வரும் நிலையில், தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு பைக்குகளில் 5 இளைஞர்களும் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, எதிர்பாராதவிதமாக இரண்டு பைக்குகளும் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.
இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த, 2 இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய 5 இளைஞர்கள் கூடலூரைச் சேர்ந்த லிங்கேஷ்(24), சேவாக்(23), சஞ்சய்(22), மோனிஷ்(22), கேசவன்(22) என்பதும், தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டதும், அதிவேகத்தில் சென்றதும் விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் லிங்கேஷ், சேவாக், சஞ்சய் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோனிஷ் மற்றும் கேசவன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தீபாவளி நாளில் சொந்த ஊருக்கு வந்திருந்த இளைஞர்கள் 3 பேர் இப்படி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.