பதுளை பேருந்து விபத்து – தொழில்நுட்பக் கோளாறா..? கவனயீனமா..?

0
91

பதுளை, துன்ஹிந்த பேருந்து விபத்து தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டதா அல்லது கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதா? என்பதைக் கண்டறிய பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விபத்தில் காயமடைந்த 34 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த மாணவிகளின் இறுதிக் கிரியைகள் இன்று (03) இடம்பெறவுள்ளன.

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் துன்ஹிந்த எல்ல பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவிகள் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், வேகமாக பேருந்து பயணித்த விதம் கார் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியிருந்தது. பேருந்து தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த தெரிவித்தார்.

விபத்தின் போது பேருந்தின் சாரதி மூன்றாவது அல்லது நான்காவது கியரில் பயணித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், சுமார் 4 கிலோமீற்றர் செங்குத்தான பகுதியில் பேருந்து வேகமாகச் சென்றதால் வழுக்கி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மண் மேட்டில் மோதியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இயந்திரக் கோளாறா? அல்லது வாகனம் ஓட்டும் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விபத்து ஏற்பட்டதா? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விபத்து நேரிட்ட போது பேருந்து எவ்வாறு இயக்கப்பட்டது என்பதை தொழில்நுட்ப ரீதியாக ஆராய்வதிலும் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த மாணவிகள் உட்பட 40 பேரில் 6 பேர் சிகிச்சை பெற்று பதுளை போதனா வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். 7 பேர் தொடர்ந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here