நெல் கொள்வனவுக்கு 3,000 கோடி ரூபா ஒதுக்கீடு..!

0
32

பெரும்போகத்தில் நெல் கொள்வனவுக்காக மூவாயிரம் கோடி ரூபாவை (30 பில்லியன்) ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நெல் கொள்வனவுக்காக மூவாயிரம் கோடி ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு நிதியமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய, காணி, கால்நடைகள், நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல்வள அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த நிதி மூலம் விவசாயிகளிடமிருந்து பெரும்போகத்தில் மூன்று இலட்சம் மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததுடன் குறித்த நிதியை சலுகைக் கடனாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அந்த நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு தேவையான களஞ்சியசாலை வசதிகளை நெல் சந்தைப்படுத்தல் சபை வழங்கவுள்ளதாகவும் மாவட்டங்கள் தோறும் உள்ள களஞ்சியசாலைகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பாரிய நெல் ஆலை உரிமையாளர்களின் நெல் மாபியா செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்…

“விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அரிசி, நெல் ஆலை உரிமையாளர்கள் வழங்கும் நிதியை போகத்தின் நெல் அறுவடை செய்வதற்கு முன்பதாகவே பெற்றுக்கொடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அவர்களிடமுள்ள நெல் களஞ்சியசாலைகளின் கொள்ளளவுக்கு இணங்க அதனைப் பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.

அவ்வாறானால் நெல் அறுவடை இடம்பெறும் போதே நெல்லை கொள்வனவு செய்து உடனடியாக அதனை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியும்.

அதேபோன்று உற்பத்தியில் 10 சதவீதம் பாதுகாப்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் வைப்பதற்கான முறைமையொன்றை இந்த பெரும்போகத்திலிருந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

அரசாங்கம் விவசாயிகளுக்கு பாரிய நிவாரணங்களை வழங்குகின்றது. அவர்கள் அறுவடை செய்யும் நெல்லுக்காக சிறந்த விலையை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்து வருகிறது.

பாரியளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் பெரும் அழுத்தங்களை பிரயோகித்து வருவது சகலரும் அறிந்ததே.

எனினும் நாம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தின் மூலம் சிறந்த விலையில் நுகர்வோர் அரிசியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துவோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here