மனைவியை பிரிவது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்..!

0
132

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா தம்பதியரின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. கணவரை பிரிவதாக சாய்ரா அறிவித்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு திருமணம் கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபலமான தம்பதிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவின் இந்த விவாகரத்து முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து உருக்கமான பதிவு ஒன்றையும் சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.

அதில், “மிகப் பெரிய 30ம் ஆண்டுக்குள் நுழைவதை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் எல்லா விஷயங்களும் ஓர் எதிர்பாராத முடிவை சுமந்திருக்கின்றன. உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும் இந்தச் சிதறலில், உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் கண்டடையாமல் போனாலும், நாங்க அர்த்தத்தை தேடுகிறோம்.

எங்களுடைய நண்பர்களே, நாங்கள் இந்த பலவீனமான அத்தியாயத்தை கடக்கும் போது உங்களுடைய கனிவுக்கும், எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிப்பதற்கும் நன்றி” என எக்ஸ் தள பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்திருந்தார்.

முன்னதாக, சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதற்றங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் இந்த விரிசலை சரிசெய்ய இயலாது. வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா தெரிவித்துள்ளார்.

தன்னுடைய வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாத்தை கடக்கும் இந்த நேரத்தில், சாய்ரா தன்னுடைய பிரைவசியை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோருகிறார்” என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here