பல பிரதேசங்களில் நேற்று (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் பெண்ணொருவர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர்.
சீதுவ, பமுனுகம, எம்பிலிப்பிட்டிய மற்றும் கடவத்த ஆகிய பகுதிகளில் மேற்படி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு – நீர்கொழும்பு வீதியின் லியனகேமுல்ல பகுதியில் நேற்று பிற்பகல் நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அதிகல் பயணித்த பெண் உள்ளிட்ட சிறு பிள்ளைகள் இருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
முதுகடுவ, மாரவில பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை எலகந்த – நீர்கொழும்பு வீதியின் தல்தியவத்த பகுதியில் எலகந்தவிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை சங்கமித்த மாவத்தையில் வசிக்கும் 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், எம்பிலிப்பிட்டிய-இரத்தினபுரி வீதியின் ஹிங்குரஆர பகுதியில் நேற்றிரவு எம்பிலிப்பிட்டியவிலிருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் 36 வயதுடைய எம்பிலிபிட்டிய, நவ நகரய பகுதியைச் சேர்ந்தவர், விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்று காலை கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் ‘சுவத உயன’ சமிக்ஞை கம்பத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட போது கடவத்தையிலிருந்து சுவத உயன நோக்கி சென்ற கெப் வண்டியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பின் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடவத்த, கோனஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.