வங்கிக் கணக்கில் ஊடுருவி 40 இலட்சம் ரூபாய் மோசடி.!

0
89

நுகேகொட பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் வங்கிக் கணக்கில் ஊடுருவி, அந்தக் கணக்கிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (9) உத்தரவிட்டார்.

கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நுகேகொட திலகரட்ன மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய விசாரணை அதிகாரிகள், மேற்படி முறைப்பாட்டாளர் காணி ஒன்றை விற்பனை செய்வதற்காக இணையத்தில் விளம்பரம் ஒன்றை செய்ததாகவும், அதனை கொள்வனவு செய்வதாக கூறி முறைப்பாட்டாளரின் கணக்கு இலக்கங்களை சந்தேக நபர் பெற்றுக்கொண்டதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டாளரின் கணக்கு இலக்கங்களை பெற்றுக்கொண்ட சந்தேகநபர் கணனி தரவு அமைப்பு மூலம் முறைப்பாட்டாளரின் வங்கி கணக்கிற்குள் நுழைந்து அதில் இருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தனக்கு நெருக்கமான மற்றுமொரு குழுவினருடன் இணைந்து இந்த மோசடிச் செயலைச் செய்துள்ளதாகவும், மோசடியாகப் பெறப்பட்ட பணம் சந்தேகநபரின் ஐந்து வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here