மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பமொன்றில் வாழும் சிறுமியொருவர் தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நவகத்திகம, ஹல்மில்லவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நவகட்டகம ஹல்மில்லவெவ பிரதேசத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான 15 வயதுடைய சிறுமி ஒருவர் சிறுமி கலேவெவ விஜய வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.
கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அவர்களது சிறிய வீட்டில் சரியாக உறங்க இடமின்றிய சூழலிலேயே குறித்த சிறுமி அங்கு வசித்து வந்தார்.
அதேவேளை சிறுமியின் தாயும் தந்தையும் கூலி வேலை செய்பவர்கள்.
இந்நிலையில், பெற்றோர் வேலை முடிந்து வீட்டிற்கு வருவதற்குள் சிறுமி உணவுத் தேவைக்காக தேங்காயின் ஒரு பகுதியை எடுத்து கறி செய்வதற்காக அரைக்க முயன்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில், கடையொன்றில் இருந்து கொண்டு வரப்பட்ட தேங்காயை சில நாட்கள் பாதுகாப்பதற்காக அரைக்கும் இயந்திரத்தில் வைத்து பொடியாக்கியது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், சிறுமி தேங்காய் துண்டுகளை பொடியாக்க பயன்படுத்திய அரைக்கும் இயந்திரம் (Mixer grinder) மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததுடன் அரைக்கும் இயந்திரத்தில் மேலும் இரண்டு கம்பிகள் பொருத்தப்பட்டு அதனை மின் செருகியில் பொருத்த சென்ற போது, மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனை அவதானித்த சிறுமியின் தம்பி ஓடிவந்து பிரதான மின்சுற்றை அணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இரவு நேரமாகியதால் இருளுக்கு பயந்து மீண்டும் பிரதான மின்சுற்றை இயக்கிய நிலையில் அதில் சிறுமி பலத்த மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கூலி வேலைக்குச் சென்ற தந்தையும் தாயும் இதுவரை வீட்டுக்கு வராததால் அக்கம்பக்கத்தினரை சத்தம் போட்டு அழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அயலவர்கள் குறித்த வீட்டிற்கு சென்று மின்சார கம்பியில் இருந்து சிறுமியை அப்புறப்படுத்தி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன்,ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அதற்குள் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.