டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் விரைவுபடுத்தப்பட்டு, புதிய வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் ‘Clean Srilanka’ திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள ‘நில மெதுர’ கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல், சமூகத்தை கருத்தியல் ரீதியாக மாற்றியமைத்தல் என்ற மூன்று துறைகளின் கீழ் ‘Clean Srilanka’ ஊடாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அந்த பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம், அநீதி அல்லது அசாதாரணம் இழைக்கப்பட்டால், அந்த நபரின் பாதுகாப்பிற்காக தாம் முன் நிற்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எவரேனும் அதிகாரியொருவர் அந்த திட்டத்தை சிதைக்கும் நோக்கில் தாமதப்படுத்தாவாராயின் அதற்கும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.