உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்காக வேட்புமனுக்களை மீள அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரரை இன்று (20) பிற்பகல் தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடாத்துவதற்கு வேட்புமனுக்கள் அழைக்கப்பட்டன. ஆனால் அன்று இருந்த கட்சிகள் இன்று இல்லை. சில கூட்டணிகள் உடைந்துள்ளன. எனவே அந்த வேட்புமனுக்களை ரத்து செய்துவிட்டு புதிய வேட்புமனுக்களை அழைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே, கடந்த தினம் அமைச்சரவையில் தீர்மானம் ஒன்றை பெற்று, வேட்புமனுக்களை ரத்து செய்வது தொடர்பான சட்டமூலத்தை தயாரித்துள்ளோம். இது ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு, மீண்டும் வேட்புமனுக்களை அழைத்து, உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு சித்திரை புத்தாண்டிற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
அதேபோல், மாகாண சபை தேர்தலும் அடுத்த வருடத்தில் நடாத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.