பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல நடிகை மகேஷி மதுஷங்காவின் கணவன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பொரலஸ்கமுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடும்பத் தகராறு தொடர்பாக பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு இரவு நடிகை நேற்று (19) தொலைபேசியில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இரவு நேர சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் உட்பட இரு கான்ஸ்டபிள்கள் நடிகையின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
வீட்டின் வரவேற்பறையில் இருந்த நாற்காலியில் இருந்து தனது முறைப்பாட்டை பதிவு செய்து கொண்டிருந்த போது, அவ்விடத்திற்குள் புகுந்த சந்தேக நபர் பொலிஸ் சார்ஜன்ட்டின் முகத்தை காலால் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது சார்ஜன்ட் நாற்காலியில் இருந்து சில அடி தூரத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், அவ்விடத்திற்கு சென்ற சந்தேகநபர் சார்ஜன்டை கழுத்தை நெரிக்க முற்பட்ட போது, அங்கிருந்த 2 கான்ஸ்டபிள்கள் சார்ஜண்டை காப்பாற்ற முற்பட்ட போது, சந்தேக நபர் அவர்களையும் காலால் தாக்கியதில், கான்ஸ்டபிள் ஒருவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார்.
கைது செய்யப்படும் போது சந்தேக நபர் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாகவும், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் எதிர்பாராத தாக்குதலால் சார்ஜன்ட்டின் இடது கண்ணும், கான்ஸ்டபிளின் வலது காலும் பலத்த காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.