வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.!

0
15

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திர சிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என சிறுவனின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஹங்குருவதோட்டை, ஹல்தோட்டை, பெதிகமுவ பகுதியைச் சேர்ந்த ஹொரணை பிரதான பாடசாலை ஒன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனான தனுஜ விக்கிரமாராச்சி, என்ற சிறுவனே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனுக்கு ஏற்பட்ட நோய் நிலைமையை தொடர்ந்து அவரது பெற்றோர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் பிலியந்தலை வைத்திய நிலையத்தில் வைத்திய சோதனைகளை செய்த பின்னர் வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய கடந்த 17 ஆம் திகதி அவர் பணிபுரியும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மறுநாள் (18) பிற்பகல் 01.30 மணியளவில், இது தொடர்பான சத்திரசிகிச்சைக்காக சிறுவனுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டதுடன், சத்திரசிகிச்சை நிறைவடைந்த போதிலும், சிறுவன் சுயநினைவுக்கு திரும்பவில்லை.

பின்னர், பெற்றோர் மற்றும் உறவினர்களின் பலமான வேண்டுகோளுக்கு இணங்க, அன்றைய தினம் மாலை 6.45 மணியளவில் சிறுவனை மேலதிக சிகிச்சைக்காக பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்தியசாலை அதிகாரிகள் அனுமதித்தனர்.

எவ்வாறாயினும், நான்கு நாட்களின் பின்னர் நேற்று (22) மாலை 4.30 மணியளவில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here