வவுனியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வெள்ளத்தில் முழ்கியதால் அதன் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்று (22.01) காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் வவுனியா குடிவரவு குடியகல்வு பிராந்திய அலுவலகத்திற்குள் வெள்ள நீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இதனால் அதன் கடவுச்சீட்டு விநியோக செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதுடன், அலுவலகத்தில் கடமையாற்றுவோர் வெள்ளத்திற்குள் நின்று தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த நீரை வெளியேற்றுவதற்கு அலுவலக உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேவேளை, வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் 20 குடும்பங்களை சேர்ந்த 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது இருப்பிடங்களில் இருந்தும் வெளியேறியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், மத்திய நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள பாவற்குளம், இராசேந்திரங்குளம், ஈரப்பெரியகுளம், முகத்தான்குளம், மருதமடுக்குளம் மற்றும் கல்மடு அணைக்கட்டு என்பன நீர் வரத்து அதிகரித்தமையால் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருகின்றன.
இதனால் அதன் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.