சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்தியாவின் சென்னை நகரத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் இந்தியாவிலிருந்து இன்றைய தினம் பிற்பகல் 02.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் சந்தேக நபர், (Green Channel) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 88 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 19 இலஙகை கடவுச்சீட்டுகள் என்பன குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.