சபையை விட்டு வெளியேற்ற நேரிடும்; அர்ச்சுனா எம்.பியை எச்சரித்த பிரதி சபாநாயகர்.! Video

0
127

சபையில் அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனை படைக்கல சேவிதர்களைக் கொண்டு சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி கடுமையாக எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (06) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமரிடத்தில் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது, சபாபீடத்தை அவமதிக்கும் வகையில் அவர் வசனமொன்றை வெளியிட்டதால் ஏற்பட்ட சர்ச்சையின் போது அர்ச்சுனா எம்.பி அமைதியற்ற முறையில் நடந்துகொண்டமையினால் சபாநாயகர் இவ்வாறு எச்சரிக்கையை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவரால் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்று தொடர்பில் பிரதி சபாநாயகர் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் போது, புதன்கிழமை பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பியினால் சபாநாயகரை பார்த்து வெட்கம் என்று கூறிய வசனத்தை சுட்டிக்காட்டியும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சபாபீட ஆசனத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். அதேபோன்று நேற்று எம்.பியொருவர் இந்த ஆசனத்தை பார்த்து ‘ஷேம்’ என்று கூறி அவமதித்துள்ளார். நான் அவ்வேளையில் இந்த ஆசனத்தில் இருந்திருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றார்.

இவ்வேளையில், அர்ச்சுனா எம்.பி அது தொடர்பில் ஏதோ கருத்து தெரிவிக்க முயன்றதுடன், அமைதியற்ற முறையிலும் நடந்துகொண்டார். இதன்போது ஆசனத்தில் அமருமாறும், சபையின் ஒழுக்கத்தை பேணுமாறும் பிரதி சபாநாயகர் அவரை கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்தும் அர்ச்சுனா எம்.பி அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட நிலையில், நீங்கள் ஆசனத்தில் அமராவிட்டால் படைக்கல சேவிதர்களை கொண்டு சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்பில் அர்ச்சுனா எம்பி அமைதியாக இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here