ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட 4 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த பெண், திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் தொழிற்சாலையில் தனது கணவருடன் பணிபுரிந்து வருகிறார். 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். தனது தாயைப் பார்க்க சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக வியாழக்கிழமை ஏறினார். அதிலும், மகளிர் மட்டும் செல்லும் பெட்டியில் ஏறியுள்ளார்.
இந்த ரயில், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது, மர்ம நபர் ஒருவர் அந்தப் பெட்டியில் ஏறியுள்ளார். ரயில் பெட்டியின் கழிவறையில் அந்த நபர் பதுங்கியிருந்தார். கே.வி.குப்பம் அருகே ரயில் வந்தபோது, கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கு மர்ம நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், கர்ப்பிணி பெண் கூச்சலிட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர், கர்ப்பிணிப் பெண்ணை ரயிலிலிருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் காயமடைந்த பெண் அலறியுள்ளார். இதனைக் கேட்டு, அந்தப் பகுதியிலிருந்த மக்கள் சென்று பார்த்தபோது, கை மற்றும் கால்களில் படுகாயங்களுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரயிலிலிருந்த பெண்களும், காயங்களுடன் பெண்ணைப் பார்த்த பொதுமக்களும் கே.வி.குப்பம் காவல் நிலைய காவலர்களுக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் விரைந்துவந்த கே.வி.குப்பம் காவல் துறையினர், பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணியிடம் ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் ஏற்கனவே பல குற்றங்களை புரிந்தவர் என்றும், பிணையில் வெளியே வந்தவர் என்றும் “ரயில் சைக்கோ கில்லர்” என அழைக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.