ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இன்று (10) பயணமானார்.
இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க துபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் உச்சிமாநாட்டிலும் உரையாற்றவுள்ளார்.
எதிர்காலத் திட்டங்கள், தொழில்நுட்ப புத்தாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தும் கருத்தாடலை ஏற்படுத்துவதற்காக உலகத் தலைவர்களை ஒரே மேடையில் அமர்த்துவதே உலகத் தலைவர்கள் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மாநாட்டில் மனித சமூகம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால முன்னேற்றங்கள், புதிய வாய்ப்புகள் தொடர்பில் நாடுகளுக்கிடையில் கருத்துப்பகிர்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதில் 150 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 4000-இற்கும் அதிகமானவர்கள் பங்கேற்கவுள்ளனர். உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் பலநாட்டுத் தலைவர்கள், அரசாங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பும் இதன்போது நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பினூடாக இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறை சார்ந்த ஒத்துழைப்புகளை பலப்படுத்திக்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதி, பிரதமர் செயிக் மொஹமட் பின் ரஷீட் அல் மக்டூமையும் சந்திக்கவுள்ளார்.
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, வலுசக்தி, சுற்றுலா, நிதி, ஊடகத் துறைகளில் முன்னணியில் உள்ள உலக நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் பலருடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியம் சென்றதையடுத்து, முக்கிய அமைச்சகங்களை மேற்பார்வையிட நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) படி, ஜனாதிபதியின் கீழ் உள்ள நான்கு அமைச்சகங்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்: டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம். இவ் அமைச்சு, ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ விஜயத்தில் அவருடன் வரும் அமைச்சர் விஜித ஹேரத்தால் மேற்பார்வையிடப்படுகிறது.
நியமிக்கப்பட்ட தற்காலிக அமைச்சர்களின் விபரங்கள் பின்வருமாறு…
- டிஜிட்டல் பொருளாதாரத்தின் பதில் அமைச்சர் – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன
- பதில் பாதுகாப்பு அமைச்சர் – அருண ஜெயசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சர்.
- நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பதில் அமைச்சர் – தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதி அமைச்சர், கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ
- வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர், அருண் ஹேமசந்திர