நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பல வீதி விபத்துகளில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கள் நேற்று (15) திக்வெல்ல, இபலோகம, வென்னப்புவ மற்றும் மீகொடை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.
திக்வெல்ல, ஹுன்னதெனிய – ரத்மலே வீதியில் தலஹிடியாகொட சந்தியில், பவுசர் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் அதில் பயணித்த 3 வயது சிறுமியும் பதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தலஹிட்டியகொட ரத்மலே பகுதியை சேர்ந்த 38 வயதான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றியர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இபலோகம பொலிஸ் பிரிவின் ஹிரிபிட்டியாகம – காகம வீதியில் பஹலவெம்புவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த சிறிய லொறியுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இதற்கிடையில், கொழும்பு-புத்தளம் பிரதான வீதியில் வென்னப்புவ புனித ஜோசப் தேவாலயத்திற்கு முன்னால் வீதியை கடந்த பெண் மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரியான பெண் , மாராவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் தெற்கு வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஆவார்.
இதற்கிடையில், கொடகம – பாதுக்கை வீதியில் கொஹேன சந்திக்கு அருகில், வீதியை கடந்த பாதசாரி மீது லொறி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் லுனெத்தொட்டை, பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.