வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலன்னறுவை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றம் நேற்று (18) பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
சில மாதங்களுக்கு முன்பு வெலிகந்த பொலிஸார் 20 மாடுகளுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மாடுகளை அரசாங்க பண்ணையில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்ட போதிலும், அவை மீண்டும் அந்த சந்தேகநபர்களுக்கே விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொறுப்பதிகாரி வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த விடயம் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த விசாரணையை முன்னெடுக்கமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் வடமத்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடமும் நீதவான் ஒப்படைத்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கடந்த 18 ஆம் திகதி பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், பிரதான சந்தேக நபரான வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி தலைமறைவாக உள்ளதாக வடமத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் குறித்த பொறுப்பதிகாரிக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலன்னறுவை இலக்கம் 02 நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.