மட்டக்களப்பு, நாசிவன்தீவு கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு, மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (4) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காவத்துமுனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், உறவினர்களுடன் நேற்று மாலை நாசிவன்தீவு கடற்கரைப் பகுதிக்குச் சென்று கடலில் நீராடிக் கொண்டிருந்தனர்.
இதன்போது, 7 வயதுடைய ஆண் மற்றும் பெண் சிறுவர்கள் இருவரும் கடல் நீரில் மூழ்கியுள்ளனர். அங்கு நீராடிக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக அவர்களைக் காப்பாற்றி, மட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் தெரிவிக்கையில், பெற்றோர் குழந்தைகள் மீது போதிய கவனம் செலுத்தாததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகவும், எனினும் குழந்தைகள் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டதால் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் கூறினர்.
தற்போது சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.