பூஸ்ஸ சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சிறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு இன்று (15) செல்ல முயன்ற வேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் அம்பலாங்கொட, குளிவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான விஜேமுனி லலந்த பிரிதிராஜ் குமார என்பவராவார்.
தெற்கின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கரந்தெனிய சுத்தாவின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்துபவரே இந்த சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காலி மற்றும் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுகளில் நடந்த ஏராளமான கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பாக சந்தேக நபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் ஏகநாயக்க முதியன்செலாகே லகிந்து சந்தீப் பண்டார என்ற போலியான பெயரைப் பயன்படுத்தி கடவுச்சீட்டைப் பெற்று, நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பலாங்கொட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.