எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னார் பகுதியில் இன்று (17) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
” 5 அல்லது 6 ஆண்டுகளுக்குப் பிறகு, எங்களிடம் மிகப்பெரிய டொலர் கையிருப்பு உள்ளது.
கடந்த 6 மாதங்களாக ரூபாய் மதிப்பு சரியவில்லை. நாங்கள் எரிபொருள் விலையைக் குறைத்தோம். மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் பாடுபடுகிறோம். அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளது.
அஸ்வெசும உதவித்தொகை அதிகரிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், அடுத்த ஜூன் மாதம் முதல் 400,000 புதிய குடும்பங்களுக்கு அஸ்வெசும வழங்கப்படும்.
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடைகள் வழங்கப்படுகின்றன. 300க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு காலணிகள் வாங்க பணம் வழங்கப்படுகிறது.
1.6 மில்லியன் மாணவர்களுக்கு அப்பியச புத்தகங்களை வாங்க தலா 6,000 ரூபாய் வழங்கினோம். இது மக்களைக் கவனித்துக் கொள்ளும் அரசாங்கம்.
அது மட்டுமல்லாமல், 5-6 வருடங்களுக்கு பின்னர் தற்போது 30,000 பேரை அரச சேவையில் சேர்க்கவுள்ளோம்.
இதற்காக எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை. பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவோம், அதன்படி பரீட்சைக்கு தோற்றி அதிக மதிப்பெண் பெற்று வேலையைப் பெறுங்கள்.
அரச சேவையில் தமிழ் பேசுபவர்களின் பற்றாக்குறை உள்ளது. பொலிஸ் நிலையங்களிலும் இது காணப்படுகின்றது.
எனவே, 2,000 புதிய பொலிஸார் பணியமர்த்தப்படுவார்கள், தமிழ் தெரிந்த உங்கள் பிள்ளைகளை பொலிஸ் பணியில் இணைய செய்யுங்கள்
இது ஒரு மரியாதைக்குரிய வேலையாகும். நம் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வேலை. மேலும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் பேசத் தெரிந்தவர்கள் அரசுப் பணியில் சேர வேண்டும். “ஒன்றாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம்.” என்றார்.
அத்துடன் வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்தது என்றும் கூறிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தி இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, மக்கள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவோம் என்றும் கூறினார்.