மட்டு – சந்திவெளி சந்தைக்கு முன் இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.
இன்று மாலை 5 மணியளவில் மட்டக்களப்பு – சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டர்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஒன்று சம்பவித்திருக்கிறது.
இந்த விபத்தின் போது மோட்டார்சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சந்திவெளியை சேர்ந்த 27 வயதான வடிவேல் மோகன சாந்தன் எனும் இளைஞன் ஆவார். கடந்த 9 தினங்களுக்கு முன்தான் குறித்த இளைஞன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் சிக்கிய மற்றைய இளைஞனும் கை கால்களில் பலத்த காயத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.
இவ் இளைஞனின் இழப்பால் குடும்பம் மாத்திரமன்றி சந்திவெளி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
சமூக சேவை சார்ந்த செயற்பாடுகளில் சிறுவயது முதல் ஈடுபாடுள்ள இவ் இளைஞன் சந்திவெளியில் இன்று இரவு இடம்பெறவிருந்த கரப்பந்தாட்ட நிகழ்வில் கலந்துகொள்வோருக்காக வெதுப்பகம் ஒன்றில் உணவினை கொள்வனவு செய்ய வந்த போதே இந்த இளைஞன் விபத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.