விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த விமானப்பயணி, குடிபோதையில், விமான பணிப்பெண்ணிடம் தன்னுடைய மர்ம பகுதியை காண்பிக்க முயற்சித்ததுடன், நடனமாடி, அப்பெண்ணை தொந்தரவு செய்ய முயற்சித்தார் என்றக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட 65 வயதான ஸ்வீடன் பிரஜைக்கு 26 ஆயிரத்துக்கு 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல இவ்வாறு, வியாழக்கிழமை (24) தண்டம் விதித்தார். அந்த தண்டத்தை செலுத்த தவறினால், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என கட்டளையிட்டார்.
சந்தேகநபர், வியாழக்கிழமை (24) நீதிமன்றில் ஆஜராகி, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சுவீடன் பிரஜையான இவர், இலங்கையில் பிறந்தவர் என அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். முறைப்பாடு செய்த பணிப்பெண்ணின் சார்பில், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார், முறைப்பாட்டாளர் நஷ்டஈட்டை எதிர்பார்க்கவில்லை என, நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.