திருகோணமலை – மூதூர் வீதியில் நடந்த விபத்தில் ஆட்டோ சாரதி உயிரிழப்பு.!

0
30

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் முச்சக்கர வண்டியும், சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் – பெரியபாலம் பகுதில் இன்று வியாழக்கிழமை (24) பகல் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் முச்சக்கர வண்டி சாரதியான மூதூர் – ஆனைச்சேனையைச் சேர்ந்த ஹதியத்துல்லாஹ் நஸீர் என்ற 62 வயதுடையவர் என தெரியவருகிறது.

முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது, சிறிய ரக கெப் வாகனம் பின்னால் இடித்து மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் ஜனாஸா மூதூர் பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கெப் வாகனச் சாரதி மூதூர் பொலிஸில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.